பள்ளி மாணவிகளுக்கு விஷம்... 37 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.! ஈரானில் மீண்டும் கொடூரம்!!

 
Iran

ஈரானில் விஷம் கொடுக்கப்பட்ட 37 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைந்துள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே பள்ளியை சேர்ந்த 18 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கோம் நகரை சுற்றியுள்ள 10 பெண்கள் பள்ளிகளில் இதேபோல் டஜன்கணக்கான மாணவிகள் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர். 

Iran

இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ஈரானின் மேற்கு லோரெஸ்தான் மாகாணத்தின் போருஜெர்ட் நகரில் உள்ள பள்ளிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து பேசிய ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், பெண்கள் படிக்கும் பள்ளிகளை மூட வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது ஈரான் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென போராட்ட குரல்கள் வலுத்து வருகின்றன. 

Iran

இந்த நிலையில் தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் பார்டிஸ் நகரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவிகள் 37 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி இருப்பது மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web