சாத்தூர் மாணவிகளின் சிலப்பதிகாரம் சாதனை! ஜனவரி 18ம் தேதி மதுரையில் விருது!!

 
FeTNA award

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த  இரண்டு மாணவிகள் 3 மணி நேரத்தில் சிலப்பதிகாரத்தின் மொத்த 5 ஆயிரம் அடிகளையும் ஒப்புவித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையைப் பாராட்டி வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் சார்பில் மதுரையில் ஜனவரி 18ம் தேதி, இளம் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

”விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ந. சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மா. வீரச்செல்வி யும, பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது  ச. வேணி யும் சிலப்பதிகாரத்தை முழுமையாக மனப்பாடம் செய்து 3 மணி நேரத்தில் முற்றோதல் செய்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்தம் ஐயாயிரம் அடிகளை, இவ்வாறு மனப்பாடம் செய்து ஒப்பித்தல் இதுதான் முதன்முறையெனக் கருதப்படுகின்றது.  இவர்களுக்குச் சிலப்பதிகாரத்தை  தொடர்ந்து அக்கறையுடன் கற்றுக் கொடுத்தவர் அரசுப்பள்ளித் தமிழ் ஆசிரியர் ராஜசேகர் ராஜமன்னார்  தமிழ்ப்பற்று மிக்கவர். மாணவர்கள் இருவரும், தமிழ் அறிஞர்களாக ஆவதற்குக் கற்றுத் தேர்ச்சிகொள்ள வேண்டுமெனும் ஆசை கொண்டுள்ளனர். ஆசிரியரையும் மாணவர்களையும் சிறப்பித்து ஊக்குவிப்பதில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பெருமை கொள்கின்றது” என்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் ஜனவரி 18ம் தேதி மதுரையில் தொழில்முனைவோர் மாநாடு (https://madurai.fiten.org) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாணவிகள் வீரச்செல்வி மற்றும் வேணிக்கு பேரவையின் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

From around the web