ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதித்த ரஷ்யா.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!

 
Iphone

ரஷ்யாவில் ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. இருப்பினும் வேறு நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

Iphone

இதனிடையே ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலம் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது. இதில் ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.

இதனையடுத்து ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில், “ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தப்படக் கூடாது.

Iphone

பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web