உக்ரைன் ராக்கெட் வீச்சு.. லைவ் ஷோவில் ரஷ்ய நடிகை உயிரிழப்பு.. வீரர்களை உற்சாகப்படுத்திய போது நிகழ்ந்த சோகம்!

 
Polina Menshikh

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் லைவ் ஷோ நடத்தி வந்த ரஷ்ய நடிகை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கிழக்கு உக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருந்தது. அந்த பகுதிக்கு உட்பட்ட தொன்பாஸ் என்ற பகுதியில், வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, ரஷ்ய நடிகையான போலினா மென்ஷிக் (40) என்பவர் மேடையில் லைவ் ஷோ நடத்தி கொண்டு இருந்துள்ளார்.

Polina Menshikh

அப்போது, உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மேடையிலேயே நடிகை போலினா பலியானார்.  உக்ரைனின் தாக்குதலை ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு தரப்பினரும் உறுதி செய்தனர். இதுகுறித்து உக்ரைனின் ராணுவ தளபதி ராபர்ட் புரோவ்தி சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளார்.

போலினா, மேடையில் அமர்ந்தபடி கிடார் வாசித்து கொண்டு, பாட்டு பாடினார். இதனை ராணுவ வீரர்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். பாடலின் நடுவே, உக்ரைன் ராக்கெட் வீச்சில் அந்த கட்டிடம் சேதமடைந்தது. ஜன்னல்கள் நொறுங்கிய சத்தமும் கேட்டது. விளக்குகள் அணைந்தன. தாக்குதலில் அவர் பலியானார். இந்த வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.


உக்ரைனின் 128-வது படை பிரிவை சேர்ந்த வீரர்கள் மீது இந்த மாதத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று புரோவ்தி தெரிவித்து உள்ளார்.

From around the web