அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்.. 61 பேர் பலியான சோகம்!

 
USA

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த குளிர்காலப் பனிப்புயல் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களின் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

America

பெரும்பாலான சாலைகளை பனி சூழ்ந்துள்ளதால், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக விமானங்கள், இரயில்கள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் பனிப்பொழிவுடன் வீசி வரும் கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசியில் மட்டும் 19 இறப்புகள் பதிவாகி உள்ளன.

America

இது குறித்து அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் 26 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வடக்குடகோட்டாவிலிருந்து புளோரிடா வரை மிகக் குளிர்ந்த காற்று வீசலாம்.   இன்னும் சில நாட்கள் பனியின் தாக்கம் தீவிரமடையும் என தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் 150 மில்லியனுக்கு மேல் அதிகமாக வாழும் மக்கள் தொடர்ந்து இந்த பனிப்புயலால் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.  சுமார் 2.50 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்  மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை சரிசெய்ய  மேலும் 2 வாரங்கள் ஆகலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web