சிரியாவைக் கைப்பற்றிய போராளிகள்! முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போர்!

 
Syria

சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் அசாத் க்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளது. 

50 ஆண்டுகளாக சிரியா அதிபர் அசாத் குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து வருகிறது. அசாத் ஆட்சியில் பல அரசியல்வாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.  நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

அசாத் ஐ பதவியிலிருந்து நீக்குவதற்காக ஆயுதம் ஏந்திய போராளிகள் ராணுவத்தை எதிர்த்து சண்டை போட்டு வந்தவாறு இருந்தனர். நாட்டின் வடமேற்குப் பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. போராளிகள் குழுக்கள் ஒன்றுபட்டு முன்னேறி அலெப்போ, ஹமா, ஹோம்ஸ் என முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து முன்னேறி நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் ஐயும் கைப்பற்றிவிட்டனர்.

தலைநகரைக் கைப்பற்றிய செய்தி அறிந்ததும் , பதவியிலிருந்து விலகி புதிய அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அசாத் அறிவித்துள்ளார். ராணுவமும் பின்வாங்கியுள்ள நிலையில் இரு தரப்பினருக்குமான சண்டை முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி அசாத்தின் படங்களை கொழுத்தி வருகின்றனர். அவருடைய தந்தையின் சிலையை உடைப்பதற்கும் முயற்சி செய்துள்ளனர். மக்கள் யாரும் அசாத்துக்காக கண்ணீர் சிந்தவில்லை என்று மத்தியதரைக்கடல் நாடுகளுக்கான அமெரிக்க இணை உதவிச் செயலாளர் டேனியல் ஷாபிரோ கூறியுள்ளார்.

அடுத்து யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. போராளிகள் குழுவில் முதன்மையான ஹயாத் தஹிர் அல் ஷாம் குழு சன்னி பிரிவை சார்ந்தது. அல் கொய்தாவுடன் தொடர்பில் இருந்து, பின்னர் அதனுடன் தொடர்பை துண்டித்து விட்டதாக அறிவித்தவர்கள். இந்தக் குழுவை தீவிரவாதிகள் இயக்கம் என்று அமெரிக்கா அறிவித்து இருந்தது. சிரியாவின் வரலாற்றில் புதிய பக்கம் திறந்துள்ளதாக, வெளியுறவுத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த அதிபர் யார் என்று தெரியாத நிலையில், தற்போதைய அரசை விட மோசமான ஆட்சி அமையக்கூடும் என்று அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

From around the web