24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்..? 98 லட்சம் மோசடி.. 50 வயது இத்தாலிய பெண் கைது!

 
Barbara Ioele

இத்தாலியில் 50 வயது பெண் ஒருவர் அரசின் நிதியுதவியைப் பெற பலமுறை கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியைச் சேர்ந்தவர் பார்பரா ஐயோல் (50). இவர், வேலை செய்த நிறுவனங்களையும், அரசையும் சுமார் 24 ஆண்டுகளாக ஏமாற்றி மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், 12 முறை கரு கலைந்ததாகவும் கூறி அரசிடம் இருந்து நிதிப்பயன்களை பெற்றுள்ளார்.

அரசு சலுகைகள் மூலம் இந்திய மதிப்பில் 98 லட்சம் ரூபாய் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, மகப்பேறு விடுப்புகளையும் பெற்று, வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். வயிற்றில் தலையணையை வைத்துக்கொண்டு வேலைக்கு வருவது, கர்ப்பிணிகள் கஷ்டப்பட்டு நடப்பதுபோல் மெதுவாக நடந்து வருவது போன்று நடித்து அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

Pregnant

இத்தனை ஆண்டுகளாக அவர் மீது சந்தேகம் ஏற்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. குழந்தை பெற்றதாக அவர் கூறியது உண்மையா என்பதை அறிய அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, ஐயோலின் ரகசியம் வெளிப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது அந்த பெண் செய்த குற்றங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பட்டியலிட்டனர். அந்த பெண் தனது குழந்தைகள் தொடர்பான பொய்யை உண்மையாக்குவதற்காக ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழை திருடியதாகவும், அதற்கு தேவையான போலி ஆவணங்களை தயாரித்ததாகவும் தெரிவித்தனர். ஐயோலின் குழந்தைகளை யாரும் பார்த்ததில்லை, குழந்தைகளின் பெயர்கள் எந்த சட்ட ஆவணத்திலும் இல்லை என்றும்  நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

women-arrest

விசாரணையின் முடிவில், அந்த பெண்ணின் கர்ப்பம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஒரு வருடம் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மோசடி நடத்தி தனது வாழ்க்கையை எளிதாக்க முடியும் என நினைத்த ஐயோல் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

From around the web