ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு... ஒருவர் பலி, 22 பேர் காயம்!

 
Japan

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

துருக்கி நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன.

Japan

இந்த நிலையில், ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2.42 மணிக்கு மத்திய இஷிகாவாவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடு, அலுவலங்களை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சார்பில், “ஜப்பானில் 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை'' என கூறியுள்ளது. இருப்பினும் இஷிகாவாவின் சுசுநகரில் ரிக்டர் அளவுகோலில் 7 வரை பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் இங்கு தான் அதிகளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. 


இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகள் முடங்கி உள்ளது. அதாவது பிரபலமான சுற்றுலா தளமான நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. ஒருவர் பலியான நிலையில், 22 பேர் காயம் அடைந்தனர்.

From around the web