மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சரிந்து விழுந்த கட்டடங்கள்.. 296 பேர் பலி! பகீர் வீடியோ
மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 296 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கே 44 மைல் தொலைவில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதையறிந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி 296 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு மாரகேஷை சேர்ந்த அப்தெல்ஹக் எல் அம்ரானி அளித்தப் பேட்டியில், “திடீரென கட்டடம் பயங்கரமாகக் குலுங்கியது. நான் பூகம்பம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொண்டேன். வெளியில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிர்ச்சியில் நான் இருந்த கட்டடத்திலிருந்து வெளியில் ஓடிவந்தேன்.
நிறைய பேர் என்னைப் போல் ஓடிவந்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைபேசிகள் ஏதும் வேலை செய்யவில்லை. பின்னர் தொலைபேசி பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் நாங்கள் அனைவருமே சாலையிலேயே இருப்பது என உறுதி செய்தோம்” என்றார்.
My heart goes out to the people of Morocco in the wake of a devastating earthquake.🥺Prayers for them🙏#moroccoearthquake #G20India2023 #G20Delhi
— Mahatma Gandhi (Parody) (@GandhiAOC) September 9, 2023
pic.twitter.com/hWUd0cCoBW
மாரகேஷில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். 1980-ல் எல் அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் உயிரிழந்தனர்.