சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 111 பேர் பலி.. பரபரப்பு வீடியோ!

 
china

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 111 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவிக்கின்றது.  

இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  

Earthquake

இதுகுறித்து அமெரிக்க புவியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், கன்சு  மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மற்றும் லான்ஜவ் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்து உள்ளது.  

இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.


இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதம் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

From around the web