அமெரிக்காவில் கவிஞர் நா.முத்துக்குமாரின் 50 வது பிறந்தநாள் விழா!!
கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் குழந்தைகளும் பெரியவர்களும் கவிஞர் நா,முத்துக்குமாரின் கவிதைகளை வாசித்தும், கவிஞரைப் போற்றும் கவிதைகளை இயற்றியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கவிதைகள் மழையைத் தொடர்ந்து சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கவிஞரின் முத்துக்குமாரின் கவிதைகள் நமக்கு விருந்தா? மருந்தா? என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தின் நடுவராக ப்ரீத்தி வசந்த் சிறப்பித்து இருந்தார். கவிஞரின் கவிதைகள் விருந்து என்ற தலைப்பில் சரவணக்குமார் மற்றும் அருண் வாதிட்டனர். கவிஞரின் கவிதைகள் நம் வாழ்க்கைக்கு மருந்து என்று ஜெனிதாவும் கார்த்திக்கும் எதிர் கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்தனர்.
கவிஞரின் கவிதைகள் மருந்தே என்று நடுவர் ப்ரீத்தி வசந்த் தீர்ப்பளித்தார். இந்த பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவரும் கவிஞரின் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசிய போது சிறுவயது தொடங்கி கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் நினைவுகூறும் வகையில் அமைந்தது.
முன்னதாக டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்திற்கும் கவிஞர் முத்துக்குமாருக்கும் இடையேயான உணர்வுப் பூர்வமான உறவு பற்றி முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர் தினகர் நினைவு கூர்ந்தார்.கவிஞரை டல்லாஸ் நகரின் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க விழாவுக்கு அழைத்து சிறப்பு செய்த முன்னாள் துணைத்தலைவர் முனைவர்.சித்ரா மகேஷ் தனது கவிதை மூலம் கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
கவிஞரின் தம்பி ரமேஷ்குமார், தொலைபேசி வாயிலாக மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், கலந்து கொண்ட பார்வையாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் கவிஞரை நினைவில் கொண்டு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சக்திவேல், செயலாளர் விக்டர் கவிஞர் முத்துக்குமாரின் வரிகளை நினைவு கூர்ந்து இந்த நிகழ்ச்சி மிகவும் மிகவும் குறுகிய காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக நடந்துள்ளதற்காக அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். துணைத்தலைவர் பிரவீணா, துணைச் செயலாளர் நந்தினி, துணைப் பொருளாளர் பிரகாஷ் சமூகத்தள ஒருங்கிணைப்பாளார் டெனி உள்ளிட்ட பல்வேறு குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சேதுராமன் மற்றும் ஜனனி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். இடையிடையே கவிஞரின் படைப்புகளை நினைவு கூர்ந்து பார்வையாளர்களுக்கு இலக்கிய விருந்து படைத்தனர்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொருளாளர், மெட்ரோப்ளெக்ஸ் கல்விக் கழகத்தின் இயக்குனரும் முன்னாள் தலைவருமான தமிழ்மணி கவிஞரின் டல்லாஸ் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
