போர்ச்சுகல் விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி பலி.. பகீர் வீடியோ
போர்ச்சுகலில் சிறிய ரக விமானங்கள் நடத்திய விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகலின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் நேற்று மாலை பெஜா விமான காட்சி என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், 6 சிறிய ரக விமானங்கள் யாக் ஸ்டார்ஸ் என்ற பெயரில் வரிசையாக வானில் பறந்து சென்றன.
அப்போது, எவரும் எதிர்பாராத வகையில், விமானம் ஒன்று மேலே எழும்பி சென்று மற்றொரு விமானத்தின் மீது மோதியது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதி விட்டு தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
அந்த இரண்டு விமானங்களும், சோவியத் நாட்டில் வடிவமைக்கப்பட்ட யகொவ்லெவ் யாக்-52 ரக விமானங்கள் ஆகும். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தனர். அவசரகால சேவை துறையினரும் மீட்பு பணிக்காக உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர் என விமான படை தெரிவித்தது.
Beja Air Show accident 😨😞 DEP pic.twitter.com/4WrRfoLCeO
— Don Expensive 🇪🇦 ✞ 🐸 (@kar0____) June 2, 2024
இந்த விமான விபத்தில், விமானி ஒருவர் பலியானார். தெற்கு ஐரோப்பாவில், மிக பெரிய விமான சாகச நிகழ்ச்சியாக இதனை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர் என போர்ச்சுகீசிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.