பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.. 22 பேர் பலி!

 
Pakistan

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் நேற்று காலை தடம்புரண்டன. ஷாஜத்பூர் - நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 22 பேர் பலியாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், விபத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தடம்புரண்ட பத்து பெட்டிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.  

Pakistan

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மீட்பு படையினருடன் சேர்ந்து ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்புக் குழுவினருக்கு துணையாக பாகிஸ்தான் ராணுவமும் களமிறக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.  

ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்ட சடலங்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.  


இது குறித்துப் பேசிய ரயில்வே துணை கண்காணிப்பாளர் மஹ்மூத் ரஹ்மான், “சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டிருக்கிறது. தடம்புரண்ட 10 பெட்டிகளிலிருந்தும் மக்களை மீட்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ரயில் தடம்புரண்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நவாப்ஷாவில் உள்ள மக்கள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். விபத்து நடந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் அவசரகால நெறிமுறை விதிக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

From around the web