மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை... ரூ.300ஐ நெருங்குவதால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

 
Pakistan Pakistan

பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளதால், அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்துள்ளதால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் கூடுதல் கடனுதவி கேட்டுள்ளது. இதற்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதால், அவற்றை பாகிஸ்தான் அரசு பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசின் நிதிப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், Platts Singapore என்ற கச்சா எண்ணெய் விலை நிர்ணய அமைப்பு விலையை உயர்த்தியுள்ளது. அதேவேளை, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே, பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் லூப்பிரகன்ட் ஆகிய பொருள்களின் விலை பாகிஸ்தானில் உயர்ந்துள்ளது.

Petrol

இதையடுத்து அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.13ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.272ஆக உயர்ந்து விற்பனையாகிறது. இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.293 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.2.56 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் அந்நாட்டு மதிப்பில் 190.29 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் அந்நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பும் மிக மோசமாக குறைந்துள்ளது. இதுவே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. வரலாறு காணாத வகையில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.300ஐ நெருங்கியது பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan

பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருள்கள், உணவு பொருள்களின் விலையும் விண்ணை முட்டியுள்ளது. பால், இறைச்சி போன்ற உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காத உயர்வை கண்டுள்ளது. விலைவாசி உயர்வால் பாகிஸ்தான் மக்கள் வாடிவரும் நிலையில், ரம்ஜான் பண்டிகையை காலத்தில் மீண்டும் விலை உயர்வு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

From around the web