ஆக்சிஜன் இருப்பு தீர சில மணிநேரமே உள்ளது.. நீர்மூழ்கிகள் சென்றவர்களுக்கு என்ன ஆகும்?
அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் கொள்ளிருப்பு சில மணிநேரத்தில் தீரவுள்ளதால் உள்ளே இருந்த பயணிகள் 5 பேர் குறித்து அச்சம் நிலவுகிறது.
கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இங்கிலாந்தில் இருந்து 2,200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது. பனிப்பாறை மீது மோதிய டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. உலக வரலாற்றில் மிகவும் மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் 1985ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை நீர்மூழ்கி கப்பலில் சென்று ஆய்வாளர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதேவேளை, சுற்றுலா பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று டைட்டனிக் கப்பலின் சிதைந்த பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து கடந்த 16-ம் தேதி டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அட்லாண்டிக் கடலில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்றது. இந்த சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் சென்றுள்ளார். இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் ஜூன் 19-ல் கடலுக்குள் சென்றனர். நீருக்கு அடியில் சென்ற 1.45 மணிநேரத்திலேயே இவர்கள் சென்ற கப்பல் தொடர்பை இழந்து மாயமானது.
இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்ததும் அமெரிக்க கப்பல்படை, விமான படையினர், கனடா நாட்டு கப்பல் படையினர், விமானப் படையினர் என ஒரு பெருங்குழு மாயமானவர்களை தேடும் பணியில் 3 நாள்களாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேடுதல் பணியில் சோனார் கருவி பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த கருவி மூலம் ஒலி சிக்னல்கள் நேற்று பெறப்பட்டுள்ளன. அந்த நம்பிக்கையில் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒருவேளை இந்த சத்தம் ஆழ்கடல் உயிரினங்கள் அல்லது வேறு ஏதேனும் கருவிகள் மூலம் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உள்ளே சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கியில் ஆக்சிஜன் கொள்ளிருப்பு 96 மணிநேரமே இருந்தது. தற்போது 3 நாள்கள் தாண்டிய இன்னும் சில நேரமே அதில் ஆக்சிஜன் மீதமுள்ளது. எனவே, அதற்குள் கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் உள்ளே இருக்கும் 5 பேருக்கும் ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டு விபரீதம் ஏற்படும் என அச்சம் நிலவுகிறது.