46 சதவீதம் உருமாற்றம் தான் நிறைவடைந்துள்ளது.. ஏலியனாக மாற ஆசை.. மூக்கை வெட்டிக்கொண்ட நபர்!

 
Black Alien

பிரான்சில் 35 வயதான நபர் ஒருவர் தனக்கு தானே பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு கருப்பு ஏலியனாக வாழ்ந்து வருகிறார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆண்டனி லோஃப்ரிடா (35). இவர், தான் விரும்பிய தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய மூக்கு, இரண்டு காதுகள், இரு விரல்கள் ஆகியவற்றை துண்டித்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, முகங்களிலும் கைகளிலும் பல மாறுதல்களை உண்டாக்கியுள்ளதோடு நாக்கை பச்சை நிறமாக மாற்றியுள்ளார். மேலும், உடல் முழுவதும் பச்சைக் குத்தி, கண்களின் கருவளையத்திற்குள் கூட டாட்டூக்கள் வரைந்து “பீதியை” கிளப்புகிறார். இவ்வுளவு உருமாற்றத்திற்குப் பிறகும், தன்னுடைய ஒரு காலை அகற்றப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தன்னைப் பற்றியும் ஏன் இப்படி உடலை உருமாற்றம் செய்கிறேன் என்பது குறித்தும் விரிவாக பேசினார். நீங்கள் உண்மையில் மனிதர் தானே என நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேட்டபோது, “ஆமாம், நிச்சியம் நான் ஒரு மனிதன்தான். வேண்டுமென்றால், என்னை வெட்டுங்கள், சிவப்பு நிறத்தில் ரத்தம் வரும் பாருங்கள். ஆனால் நம் எல்லாரையும் போல என்னுடைய சிந்தனையும் வித்தியாசமாக இருக்கும். நாமெல்லாம் வித்தியாசமானவர்கள் தானே” என ஆண்டனி கூறுகிறார்.

சிறுவயதிலிருந்தே நான் தனியாக இருந்த காரணத்தினால், நமக்கு சரியான உடல்வாகு இல்லை என எப்போதும் எனக்கு தோன்றும் எனக் கூறும் ஆண்டனி, அறுவை சிகிச்சைக்கு முன்பிருந்த தன்னுடைய புகைப்படங்களை பார்த்தபடியே, ஆஹா, நான் கவர்ச்சிகரமானவன்” என சந்தோஷம் அடைகிறார். ஏன் இப்படி மாற நினைத்தீர்கள் என அவரிடம் கேட்டபோது, “நான் அதே மனிதன்தான், அதே இயதம் தான் இன்னும் என்னிடம் இருக்கிறது” என்கிறார்.

Black Alien

ஹோட்டலில் வசித்து வரும் இந்த “கருப்பு ஏலியன்”, தன்னுடைய சட்டப்பூர்வ அடையாள அட்டையை பெருவதற்கு கடும் சிரமங்களை சந்தித்துள்ளார். “வழக்கமாக இதைப் பெற ஒரு மாதம் ஆகும். ஆனால் எனக்கோ ஒரு வருடம் ஆனது. ஒருவேளை இந்த நபர் “தேடப்படுவோர்” பட்டியலில் உள்ளவரா, அதனால் தான் தன்னை மறைத்துக் கொள்ள இப்படி உருமாறியுள்ளாரா என்றெல்லாம் போலீசார் சந்தேகித்தனர்.”

தனது உடலை மாற்றிக் கொள்ளப் போகிறேன் என தன்னுடைய பெற்றோரிடம் அவர் அனுமதியும் வாங்கவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் எதுவும் கூறவும் இல்லை. இதுகுறித்து அவர்களிடம் எதுவும் சொல்லாமல், திடீரென்று கிறிஸ்துமஸ் அன்று என் பெற்றோர்களின் வீட்டிற்குச் சென்றேன். முதல் 15 நிமிடங்கள் என்னை விசித்திரமாக பார்த்தார்கள். அப்புறம், எல்லாம் சரியாகிவிட்டது. ஏனென்றால், சிறுவயதிலிருந்தே என் விருப்பப்படி நடக்க என்னுடைய பெற்றோர்கள் என்னை அனுமதித்தார்கள்” என்கிறார் ஆண்டனி.

“மக்கள் எப்போதும் கிசுகிசுப்பை விரும்புவார்கள். அடுத்தவர்களை மதிப்பிடுவதிலேயே நேரத்தைச் செலவழிப்பார்கள். ஒருவகையில் வருத்தமாக இருந்தாலும், இதுதான் மனிதனின் இயல்பு. ஏன் என்னிடம் பாகுபாடு காண்பிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. டாக்ஸிகள் என்னைக் கண்டால் நிறுத்துவதில்லை. உணவகத்தில், என்னைப் பார்த்தால் வேறு டேபிளுக்கு மாறிச் சென்றுவிடுகிறார்கள்” என தனக்கு நேரந்த கசப்பான சம்பவங்களை கூறினார். திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையென்றும், தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறும் ஆண்டனி, தன்னுடைய “விசேஷமான நண்பன்” மெக்ஸிகோ நகரில் வசித்து வருவதாக கூறுகிறார்.

“பலரும் இதைப் பற்றி புரியாமல் இருப்பார்கள். தங்கள் அறிவை அவர்கள் கொஞ்சம் விசாலாமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நாமெல்லாம் வித்தியாசமானவர்கள். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சிந்தனை, அறிவு, சுவைகள் இருக்கின்றன. நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்னை ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனையும், அவன் வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கும் சற்று மதிப்பு கொடுங்கள்” என இந்த ஆவணப்படத்தின் முடிவில் கொஞ்சம் உணர்ச்சி ததும்ப பேசினார்.

தனக்கு தானே பல உறுப்புகளை துண்டித்தும், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும், வெறும் 46 சதவீதம் உருமாற்றம் தான் நிறைவடைந்துள்ளதாக கூறி ஆண்டனி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

From around the web