கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த 2 மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த வட கொரியா..!

 
North Korea

தென் கொரியா நாட்டின் இசை நிகழ்ச்சியை பார்த்த  2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வடகொரிய அரசு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பெயரில் இவை முன்னெடுக்கப்படுகிறது, வட கொரியாவில் தென் கொரிய நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், சமீபத்தில் தென் கொரியாவின் சினிமா பாப் இசையை ரசித்த இரண்டு 16 வயது சிறுவர்களுக்கு வட கொரியா தண்டனை விதித்துள்ளது. வட கொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.

North Korea

இது குறித்து டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியர் சோய் க்யோங் ஹுய் கூறுகையில், “இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரிய மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த வீடியோ 2022-ல் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன். ஜென் எக்ஸ் தலைமுறையினர் அவர்கள் சிந்திக்கும் போக்கை மாற்றியுள்ளனர். அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. இது கிம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

தண்டனை வீடியோவில் ஓர் அரைவட்ட திறந்தவெளி அரங்கில் பழுப்பு நிற உடையணிந்த 2 சிறார்கள் கைகள் கட்டப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். அரங்கில் 1,000 சிறார்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கின்றனர். இதுவே அந்த வீடியோ கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. அப்போது ஒருவர் தண்டனையை அறிவிக்கிறார்.


அவர்கள் இருவரும் வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை அழித்துக் கொண்டார்கள் என கூறுகிறார். தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்கள் 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும்படி வட கொரிய அரசு தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web