2024-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!
2024-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படும்.
அந்த வகையில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு மைக்ரோ ஆர்என்ஏவை (RNA) கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் இயற்பியலை தொடர்ந்து, வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி டேவிட் பெக்கர், டெமிஸ் ஹாசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு கூட்டாக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2024
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2024 #NobelPrize in Chemistry with one half to David Baker “for computational protein design” and the other half jointly to Demis Hassabis and John M. Jumper “for protein structure prediction.” pic.twitter.com/gYrdFFcD4T
மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலை தொடர்ந்து இலக்கியத்துக்கானது நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 11-ம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 14-ம் தேதியும் அறிவிக்கப்படுகிறது. நோபல் பரிசு நிறுவனரான ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ந்தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது