காதலரை கரம் பிடித்த நியூசிலாந்தின் முன்னாள் பெண் பிரதமர்.. வைரலாகும் புகைப்படங்கள்!

 
Jacinda Ardern

முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது காதலரை நேற்று திருமணம் செய்துக் கொண்டார்.

நியூசிலாந்தில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரதமராக பதவி வகித்தவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (43). இவர், தனது 37 வயதில் அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

கொரோனா தொற்று நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் பதவி விலகல் முடிவை எடுத்திருக்கிறார் என அப்போது, தகவல் வெளியானது. இவர் பிரதமர் ஆவதற்கு முன்பு, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கெபோர்டுடன் 2014-ம் ஆண்டு காதல் வயப்பட்டார். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த இந்த ஜோடிக்கு காதல் பரிசாக பெண் குழந்தை பிறந்தது.  

Jacinda Ardern

இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானில் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.  

இருவருக்கும் 2019-ம் ஆண்டு நிச்சயம் நடந்தபோதும், திருமணம் தள்ளி கொண்டே போனது. 2022-ம் ஆண்டு திருமணம் செய்ய இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றால் அது நடைபெறாமல் போனது. கொரோனா பரவலின்போது, பிரதமராக இருந்த ஜெசிந்தா, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, அதனை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் ஆதரவை பெற்றார். எனினும், அவர் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.  


இந்நிலையில், இருவருக்கும் நேற்று (ஜன. 13) திருமணம் நடந்தது. நியூசிலாந்தின் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்த வடக்கு தீவான, சிராக்கி ரேஞ்ச் வைனரியில் ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடந்தது. ஆர்டர்ன் வெள்ளை நிற ஆடையிலும், கிளார்க், கருப்பு நிற ஆடையிலும் காணப்பட்டனர்.  இவர்களுடைய திருமண நிகழ்வில், 50 முதல் 75 பேர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் ஆர்டர்னுக்கு பின் நியூசிலாந்து பிரதமரான கிறிஸ் ஹிப்கின்ஸ் கலந்து கொண்டார்.

From around the web