100-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மரணம்.. அமெரிக்க பெண் மத போதகர் காரணமா?
உகாண்டாவில் 100-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மரணத்திற்கு அமெரிக்க பெண் மத போதகர் ஒருவரே காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் ரெனி பாக் (39). மத போதகரான இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஆதாயமற்ற ஊட்டச்சத்து குறைபாடு மறுவாழ்வு மையம் ஒன்றை உகாண்டாவில் நிறுவியுள்ளார். இது கடவுளால் தமக்கு இடப்பட்ட கட்டளை என்றும் ஊட்டச்சத்து குறைபாடு, ஏழ்மை மற்றும் பிணிகளில் இருந்து காப்பாற்றப்பட இதுவே வாய்ப்பு என்றும் அவர் அங்குள்ள மக்களை நம்ப வைத்தார்.
ஆனால் அதன் பின்னர் தொடர்புடைய குழந்தைகளுக்கு மிக ஆபத்தான, உரிமம் பெறாத மருத்துவ சிகிச்சைகளை இவரது அமைப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையிலேயே ரெனி பாக்கின் அமைப்பு 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது என அம்பலமாகியுள்ளது.
மத போதகரான ரெனி பாக், ஒரு மருத்துவர் போலவே செயல்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் ரெனி மீது உள்ளூரிலும் உகாண்டாவிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உகாண்டா அல்லது அமெரிக்காவில் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. அவர் மீது உரிய முறைப்படி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
2010 முதல் 2015-ம் ஆண்டு வரையில் ரெனியின் மறுவாழ்வு மையம் 940 சிறார்களை ஏற்றெடுத்துள்ளது. ஆனால் இதில் 105 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2019 ஜனவரி மாதம் உகாண்டாவில் ரெனி தொடர்பில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு தாய்மார்களுக்கு 9 ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்க ரெனி பாக் அமைப்பு உறுதி அளித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 4 குடும்பங்கள் ரெனி அமைப்பு மீது புகார் அளித்துள்ளதுடன் இழப்பீடும் கோரியுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ரெனி தெரிவிக்கையில், நூற்றுக்கணக்கான பிள்ளைகளை தாம் காப்பாற்றியிருக்கிறேன். கொன்றுள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்றார்.