அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 73 பேர் பலி.. தென் ஆப்ரிக்காவை உலுக்கிய சோகம்!

 
SAF

தென் ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 73 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது.

SAF

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டாலும், 7 சிறுவர்கள் உள்பட 73 பேர் பலியாகினர்.

இதுவரை 64 பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. 52 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து கட்டடத்துக்குள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடம் ஒரு ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருந்ததால், தீ விபத்து நேரிட்டபோது பலரும் கட்டடத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். வெளியேற முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் ஒரு காலத்தில் பரபரப்பாக செயல்பட்ட கட்டிடமாக இருந்து வந்துள்ளது. தற்போது குற்றச்செயல் புரியும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது. சட்டப்படி மற்றும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது.

From around the web