அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 56 பேர் உடல் கருகி பலி!

 
Vietnam

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் தலைநகர் ஹனோய் நகரில் 9 அடுக்கு கட்டிட குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தனர். அவர்கள் தீயில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். 

Vietnam

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் 150க்கும் மேற்பட்டோரை மீட்க போராடி வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகலான சந்து பகுதி என்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மீட்புப் படையினருக்கு சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த தீபத்தில் தீ காயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் 4 குழந்தைகள் உள்பட 56 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான 56 பேரில் 39 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான வியட்நாம் செய்தி புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.


அவசர கால வழி இல்லாத கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு வியட்நாமின் பின் டுயோங் மாகாணத்தில் உள்ள கரோக்கி பார்லரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

From around the web