மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவன்.. இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்
இங்கிலாந்தில் மணைவியை கொன்று 224 துண்டுகளாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்தவர் நிகோலஸ் மெட்சன் (28). இவரது மனைவி ஹொலி பிரம்லி (26). இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. செல்லப்பிராணிகள் மீது மிகுந்த வெறுப்பு கொண்டுள்ள நிகோலஸ் தனது மனைவி வளர்த்த செல்லப்பிராணிகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹொலி வளர்த்த செல்லப்பிராணி வெள்ளெலிகளை மிக்சியில் அரைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொடூரமாக கொன்றுள்ளார். அதேபோல், செல்லப்பிராணி நாயை துணிதுவைக்கும் எந்திரத்தில் வைத்து அரைத்து கொடூரமாக கொன்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், திருமணமாகி 16 மாதங்களாக மனைவி ஹொலியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அனுப்பாமல் நிகோலஸ் துன்புறுத்தியுள்ளார். அதேவேளை, தனது மகளை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஹொலியின் பெற்றோர் கடந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, விசாரணை மேற்கொண்ட போலீசார், நிகோலசின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது, மனைவி ஹொலி தன்னை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக நிகோலஸ் போலீசிடம் கூறியுள்ளார். மேலும், மனைவி பல்லால் கடித்ததில் தன் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய போலீசார் நிகோலஸ் வீட்டில் இருந்து சென்றனர்.
இந்நிலையில், ஹொலி மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு 8 நாட்கள் கழித்து கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி லிங்கொன் பகுதியில் உள்ள வித்ஆம் ஆற்றில் பிளாஸ்டிக் பையில் மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அது ஹொலியின் உடல் என்பதை கண்டுபிடித்தனர். ஹொலியின் உடல் 224 துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஹொலியின் கணவன் நிகோலசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரியும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி ஹொலியை நிகோலஸ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 224 துண்டுகளாக வெட்டி வீட்டின் சமையல் அறையில் உள்ள பிரிட்ஜில் ஒருவாரமாக வைத்துள்ளார்.
பின்னர், தனது நண்பனான ஜோஷ்வா ஹென்காக்கை (28) அழைத்து மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த 50 பவுண்டுகள் பணம் (இந்திய மதிப்பில் 5,260 ரூபாய்) கொடுத்துள்ளார். இதையடுத்து, ஜோஷ்வாவுடன் சேர்ந்து துண்டுதுண்டாக்கப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த தனது மனைவியின் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து வித்ஆம் ஆற்றில் வீசியதை நிகோலஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
மனைவியை கொலை செய்தப்பின் மனைவி இறந்தபின்னர் கிடைக்கும் பலன்கள் என்ன?, யாரேனும் உயிரிழந்த பின்னர் அவர்கள் ஆவியாக வந்து என்னை வேட்டையாடுவார்களா? என்றெல்லாம் நிகோலஸ் இணையதளத்தில் தேடியுள்ளார். அதேபோல், 50 பவுண்டுகள் பணம் வந்துவிட்டதாக நிகோலசுக்கு அவரது நண்பன் ஜோஷ்வா மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர்.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனை விவரம் விரைவில் வெளியாக உள்ளதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நிகோலஸ் செல்லப்பிராணிகள் மீது வெறுப்பும் கொண்டவராகவும், ஆட்டிசம், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.