நிலவில் விழுந்து நொறுங்கிய லூனா-25.. சந்திரயான்-3க்கு போட்டியாக அனுப்பிய ரஷ்யா ஷாக்!

 
Luna

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக லூனா-25 விண்கலத்தை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் கடந்த 10-ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் கடந்த 16-ம் தேதி வெற்றிகரமாக நுழைந்த விண்கலம் ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

Luna 25

கடந்த சனிக்கிழமை விஞ்ஞானிகள், லூனா-25 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை நிலவுக்கு நெருக்கமாகக் குறைக்கும் பணியில் ஈடுபட்டபோது, சில தொழில்நுட்பக் கோளாறுகள் நேர்ந்தன. லூனா-25 விண்கலத் திட்டத்தில் அவசரகால சூழல் ஏற்பட்டுள்ளதாக ராஸ்கோஸ்மாஸ் சனிக்கிழமை தெரிவித்திருந்தது. அதைச் சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

satellite

நேற்றைய தினம் லூனா 25இன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும்போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

From around the web