பெண்களே அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்.. கண்ணீருடன் கோரிக்கை வைத்த கிம்ஜாங் உன்!
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் பெண்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்த வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். அதோடு கிம்ஜாங் உன் சர்வாதிகாரிபோல் அந்த நாட்டை ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில்தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என பேசினார்.
இப்படி பேசும்போது கிம்ஜாங் உன் கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Kim Jong Un just started crying on national TV because people are not having enough babies pic.twitter.com/IJd3u2M6An
— Matt Wallace (@MattWallace888) December 5, 2023
தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம்தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.