உலகை உலுக்கிய குவைத் தீ விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை!

 
Kuwait

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் பாிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. என்பிடிசி குழுமத்துக்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் கேரளா, தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 200 பேர் இதில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பலர் தப்பித்து வெளியே ஓடினர். ஆனால், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். தங்களைக் காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். தீ விபத்து ஏற்பட்டவுடன் சிலர் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Kuwait

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “இந்த கட்டிடத்தில் தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் பலர் தங்கியிருந்தனர். தீயணைப்பு படையினர் உதவியுடன் பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக புகையை சுவாசித்ததில் பலர் உயிர் இழந்தனர்” என்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த 41 இந்தியர்களில் கேரளாவைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் பஹத் அல் யூசுப் அல் சபா தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காப்பாளர் ஆகியோரை கைது செய்ய போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே தீ விபத்தில் இந்தியர்கள் பலியானதாக வந்த தகவலையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அவசரமாக குவைத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதற்கு முன் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று மாலை பிரதமரை சந்தித்து பேசினோம். அங்கு சென்றவுடன் நிலைமை சரியாகிவிடும். பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளன, மேலும் உடல்கள் அடையாளம் காணப்பட்டவுடன், விமானப்படையின் விமானம் தயார் நிலையில் உள்ளது. உடல்களை இந்தியா கொண்டு வருவோம்” என்றார்.


இந்த நிலையில் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், “குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து காரணமாக, 53 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

From around the web