கமலா ஹாரிஸ் ரிட்டர்ன்ஸ்... கலிஃபோர்னியாவுக்கு குறி!!

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்பிடம் தோல்வியை சந்தித்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதன் முறையாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஜனநாயகக் கட்சியில் பெண்கள் அரசியலுக்கு ஆதரவளிக்கும் எமர்ஜ் அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய 16 நிமிடப் பேச்சு அமெரிக்காவில் வைரலாகி உள்ளது,
அதிபர் ட்ரம்பின் வரிக் கொள்கை, குடியுரிமைக் கொள்கை, பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார் கமலா ஹாரிஸ். அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் களம் இறங்குவார் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்திருந்த நிலையில், கலிஃபோர்னியா மாநிலத்தின் கவர்னர் பதவிக்கு போட்டியிட கமலா ஹாரிஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.
கலிஃபோர்னியாவின் தற்போதைய கவர்னர் கவின் நியுசம் இரண்டு தடவை பதவி வகித்து விட்டதால் மீண்டும் போட்டியிட முடியாது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கலிஃபோர்னியா கவர்னர் தேர்தலில் ஏற்கனவே பல தலைவர்கள் போட்டியில் உள்ளனர். கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் களம் அவருக்கு சாதகமாகத் திரும்பி விடும்.
அடுத்த 8 ஆண்டுகள் கலிஃபோர்னியா கவர்னராக ஆட்சி செய்து விட்டு பின்னர் மீண்டும் அதிபர் தேர்தலில் களம் இறங்கலாம் என்பது தான் கமலா ஹாரிஸின் நீண்ட காலத் திட்டம் என்கிறார்கள்.
கமலா ஹாரிஸ் ஒரு பிறவிப் போராளி. எல்லா இடர்களையும் துணிச்சலாக எதிர்கொண்டு போட்டியிட்டு வெற்றிகளைக் குவித்தவர். சான் ஃப்ரான்சிஸ்கோ நகர அட்டர்னி, மாநில அட்டர்னி ஜெனரல், அமெரிக்க செனட்டர், துணை அதிபர் என்று தொடர் வெற்றிப்பாதையில் பயணித்தவருக்கு அதிபர் தேர்தல் தான் சறுக்கி விட்டது.
பிரதமர் மோடி கூட கமலா ஹாரிஸ் தான் அடுத்த அதிபர் என்று நம்பியதால், தேர்தலுக்கு முன்னர் ட்ரம்ப் ஐ சந்திக்காமல் தவிர்த்தார். அதுவே ட்ரம்ப் - மோடி நட்புக்கு விரிசலாகவும் அமைந்து விட்டது.
இந்நிலையில் கலிஃபோர்னியாவிலிருந்து மீண்டும் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க முடிவு செய்துள்ளார் கமலா ஹாரிஸ் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது.