கடைக்குப் போன கமலா ஹாரிஸ்! குவியும் கண்டனங்கள்

கடந்த திங்கட்கிழமை ஜனவரி 20ம் தேதி துணை அதிபர் பதவியிலிருந்து இறங்கி, புதிய துணை அதிபரிடம் பதவி மாற்றம் செய்த பிறகு, கமலா ஹாரிஸ் கணவருடன் சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவுக்கு சென்றுவிட்டார்.
தற்போது கணவனும் மனைவியும் தங்களை சராசரி அமெரிக்க வாழ்க்கைக்கு பழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். கடைவீதிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது போன்றவற்றிற்காக இருவரும் காரில் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ஜீன்ஸ் ஷர்ட் போட்டுக்கொண்டு செல்பவர்களைக் கண்டால் உடனடியாக யாருக்கும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள்.
இந்நிலையில் கலிஃப்போர்னியாவின் வெஸ்ட்வுட் பகுதியில் இயங்கி வரும் 99 ராஞ்ச் மார்க்கெட் என்ற ஏசியன் சூப்பர் மார்க்கெட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். தொப்பியை வைத்திருந்ததால் கமலா ஹாரிஸை எளிதில் யாரும் அடையாளம் காண முடியவில்லை. ஆனாலும் பொது மக்கள் கண்களிலிருந்து அவர்கள் தப்பவில்லை.
கமலா ஹாரிஸும் கணவர் டக் எம்ஹாஃப்- ம் கடையில் பில் போடுவது முதல் வெளியே பைகளைக் கொண்டுவது வரையிலும் வீடியோ படம் பிடித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் சொந்தக்கட்சியினர் உட்பட பலரும் கமலா ஹாரிஸை கன்னாபின்னா என்று திட்டி வருகிறார்கள்.
காரணம் வேறு ஒன்றும் இல்லை, அம்மணி கையிலும் அவருடைய ஆம்படையான் கையிலும் ப்ளாஸ்டிக் பைகளில் பொருட்கள் இருந்தது தான் பொதுமக்களின் கோபத்திற்கு காரணம். ப்ளாஸ்டிக் ஒழிப்பு என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டு கையில் ப்ளாஸ்டிக் பைகளை கொண்டு சென்றால் கோபம் வரத்தானே செய்யும்.
கலிஃபோர்னியா மாநிலத்தில் ப்ளாஸ்டிக் பைகளுக்கு கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வசம் சொந்தப் பைகளை வைத்திருப்பார்கள். நம்மூரு மஞ்சப்பை போல, வீட்டிலிருந்தே ஷாப்பிங் பைகளைக் கொண்டு செல்வது கலிஃபோர்னியாவில் நடைமுறையாகும்.
கமலா ஹாரிஸ் அடுத்த தடவ ஷாப்பிங் போகும் போது வீட்டிலிருந்தே பைகள் கொண்டு செல்வார் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.