அதிகம் விற்பனையான ‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ புத்தகம்.. அப்படி என்ன இருக்கு?? கருத்து தெரிவித்த வாசகர்கள்!
கமலா ஹாரிசின் சாதனைகள் புத்தகங்கள் அதிகளவில் விற்பனையான நிலையில், புத்தகம் பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஜேசன் டுடேஷ் என்பவர் எழுதி, மைக்கேல் போல்ஸ் என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஹாரிசின் 20 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் நடந்த விசயங்கள் இந்த புத்தகத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் அமேசான் விற்பனை நிறுவனத்தின் அதிக விற்பனைக்கான புத்தக வரிசையில் இதுவும் இடம் பெற்று பிரபலமடைந்து உள்ளது. 191 பக்கங்களுடன், ஹாரிசின் வாழ்வில் நடந்த விசயங்கள், அவர் பெற்ற வாக்குகள், அவருடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் அரசியலில் அவருடைய நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பற்றிய விவரங்களை, உண்மையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், ஆர்வத்துடன் இதனை வாங்கி பார்த்த வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், இந்த புத்தகத்தில் அனைத்து பக்கங்களும் காலியாக உள்ளன. விவரங்கள் எதுவும் இன்றி வெற்று காகிதங்களாகவே உள்ளன. ஒரு சில இடங்களில் தடித்த அளவில் சில வார்த்தைகள் காணப்படுகின்றன. இதுதவிர புத்தகத்தில் வேறு எதுவும் இல்லை.
இதில் ஆச்சரியப்பட வைக்கும் விசயம் என்னவென்றால், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆதரவு தெரிவிப்பதற்கு கமலா ஹாரிஸ் ஏன் தகுதியானவர்? என விவரிக்கும் வகையில், விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புத்தகம் உருவாகியுள்ளது என அந்த புத்தகம் பற்றிய அமேசானின் விவர குறிப்பு தெரிவிக்கின்றது.
🚨BREAKING: Walmart now has a new book on the shelves called The Achievements of Kamala Harris. All the pages in the book are blank. pic.twitter.com/PWdFWp8Lyu
— Philip Anderson (@VoteHarrisOut) October 6, 2024
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட செய்தியில், ‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ என்ற பெயரில் வெளிவந்து உள்ள இந்த புதிய புத்தகம் வால்மார்ட் விற்பனை நிறுவனத்தில் உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் உடனடியாக வைரலாக பரவி 50 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஆன்லைன் வாசகர் ஒருவர் கிண்டலாக வெளியிட்ட செய்தியில், வெறும் 16 டாலரா? விலைமதிப்பற்றது என பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், நான் இதனை பதிவிறக்கம் செய்தேன். அதனை காதில் கேட்கும்படி வாசிக்க செய்தேன். நீண்டநேரம் அமைதியாக இருந்தது. அதனால் மகிழ்ந்தேன் என்று தெரிவித்து உள்ளார். இன்னொருவரோ, விரைவாக வாசித்து முடித்து விட்டேன். எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. கமலா ஹாரிஸ், நீங்கள் நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு இருக்கிறார்.