பூமியை விட இருமடங்கு பெரிது.. நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்த புதிய கோள்!
பூமியை போன்று இரு மடங்கு பெரியதாக தண்ணீருடன் உள்ள புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நாள்தோறும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. பூமி கிரகத்திற்கு மாற்றாக பிரபஞ்சத்தில் வேறு கிரகங்கள் ஏதேனும் உள்ளதா? ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் மனித குலம் வாழ முடியுமா என்றும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் புதிய கண்டு பிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கி மூலம் அதிக நீர் மூலக்கூறுகளை கொண்ட கோளை கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகத்துக்கு 'GJ 9827d' என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த கிரகத்தின் விட்டம், பூமியை விட இரு மடங்கு பெரியதும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேலும் அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவி மூலக்கூறுகள் அதிக அளவு உள்ளதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்குள்ள வெப்பநிலை 800 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உள்ளதால், 'GJ 9827டி' கிரகத்தில் எந்த உயிரினமும் வாழ்வதற்கு சாத்தியம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹப்பிள் தொலைநோக்கி, இந்த புதிய கிரகத்தை 3 ஆண்டு காலத்தில் அதன் நட்சத்திர சுற்றுப்பாதையை கடக்கும் போது ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
GJ 9827d ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தை நீரின் தடயங்களுடன் தக்க வைத்திருக்கலாம் என்றும் இந்த கிரகம் பாதி தண்ணீராகவும் பாதி பாறையாகவும் இருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகத்தில் மேகங்கள் இருந்தால், அவை ஹப்பிளின் பார்வையைத் தடுக்காத அளவுக்கு குறைவாக இருக்கும் என்றும் மேகங்களுக்கு மேலே உள்ள நீராவியைக் கண்டறிய முடியும் என்றும் நாசா விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.