ஆரம்பிச்சிட்டாங்கல்ல! ட்ரம்ப் குடியுரிமை ஆணையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற மாநிலங்கள்!!

திங்கட்கிழமை அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், 26 ஆணைகளைப் பிறப்பித்தார். அதில் முக்கியமான ஒன்று பிறப்பின் அடிப்படையில் அனைவருக்கும் குடியுரிமை என்பதை மாற்றும் வகையில் பிறப்பித்த ஆணை.அதாவது, அமெரிக்க குடிமக்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெற முடியும் என்பது தான் ட்ரம்ப் - ன் ஆணையாகும். இதன்படி இந்தியாவிலிருந்து ஹெச்1 பி விசாவில் சென்றவர்கள் மற்றும் க்ரீன்கார்டு வைத்திருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை கிடையாது. சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடையாது.
அதிபர் ட்ரம்பின் இந்த ஆணை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று 20க்கும் மேற்பட்ட அமெரிக்க மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.அமெரிக்க அரசியல் சாசனம் திருத்தம் 14வது படி அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவரும் பிறப்பாலேயே அமெரிக்க குடிமக்கள் ஆகிறார்கள் என்பதாகும். அதிபர் ட்ரம்ப்-ன் ஆணை இதற்கு மாறாக இருப்பதால் இந்த ஆணையை எதிர்த்து அமெரிக்க ஒன்றிய நீதிமன்றங்களில் மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
ஆரகன், இலனாய், கலிபோர்னியா, கொலோராடோ, கனெக்டிகட், டெலவர்,ஹவாய், மெய்ன், மேரிலாண்ட், மசசூசட்ஸ், மிஷிகன்,மினசோட்டா, நெவடா, நியூஜெர்சி, நியூமெக்சிகோ,நியூயார்க், வடக்கு கரோலைனா,ரோட் ஐலண்ட், வெர்மாண்ட், வாஷிங்டன், விஸ்கான்ஸின் ஆகிய மாநில மாநில அட்டர்னி ஜெனரல்கள் ட்ரம்ப்-ன் குடியுரிமை ஆணையை எதிர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சான் ஃப்ரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி நகரங்களும் தங்கள் சார்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மாநிலங்கள் அனைத்திலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கவர்னர்கள் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.
ட்ரம்ப் பிறப்பித்துள்ள இந்த ஆணை பிப்ரவரி 19, 2025 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தொடர்ந்துள்ள வழக்குகள் மூலம் இந்த ஆணைக்கு இடைக்கால தடை வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வழக்குகளும் விசாரணை முடிந்து, உச்சநீதிமன்றத்திலும் மேல் விசாரணை முடிந்த பிறகே இந்த ஆணை அமலுக்கு வர முடியும். 14வது திருத்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். ட்ரம்ப்-ன் குடியரசுக்கட்சிக்கு அவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது என்பதால் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பிப்ரவரி 19க்குள் இடைக்கால தடை கிடைத்துவிட்டால், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையில், உடனடியாக எந்த ஒரு மாற்றமும் இருக்காது.