வெறும் காய்ச்சல் அறிகுறிதான்.. அமெரிக்காவில் அமீபா நோய்க்கு 2 வயது சிறுவன் பலி..!
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் மூளை தின்னும் அமீபாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள அலமோ நகரை சேர்ந்தவர் ப்ரியானா பண்டி. இவரது மகன் உட்ரோ டர்னர் பண்டி (2), கடந்த ஜூலை 19-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தான். அவனுக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவனுக்கு மூளையை உண்ணும் அமீபா என்ற நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
அங்கே நீச்சல் குளத்தில் விளையாடும் போது, இந்த அமீபா அவனது உடலில் புகுந்துள்ளது. இது தொடர்பாக தாய் ப்ரியானா பண்டி சில உலுக்கும் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். “டர்னர் இன்று (ஜூலை 19) அதிகாலை 2.56 மணிக்கு உயிரிழந்தான். கடந்த 7 நாட்களாக அவன் மிகக் கடுமையாகப் போராடினான். இதுவரை இந்த மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டோர் அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர்.
ஆனால், டர்னர் 7 நாட்கள் இதை எதிர்த்துப் போராடி இருக்கிறான். உலகிலேயே வலிமையான மகன் எனது மகன்தான். அவன் என் ஹீரோ. எனக்கு இப்படியொரு மகனைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. எனது மகனை என்றாவது ஒரு நாள் சொர்க்கத்திற்குச் சென்று சந்திப்பேன்” என்று நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம் டர்னருக்கு திடீரென காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு இருக்கிறது. அப்போதுதான் தனது மகனுக்கு ஏதோ மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவரது பெற்றோர் உணர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுவனை அவரது தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். முதலில் அந்த இரண்டு வயதுக் குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் இருக்கலாம் என்றே மருத்துவர்கள் கருதினர்.
அதன் பிறகு நடத்தப்பட்ட சோதனையிலேயே அவருக்குக் கொடிய மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு சமீப காலமாக பெரும் கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. நெக்லேரியா ஃபோலேரி என்பது ஒரு வகை ஒற்றை உயிரணு அமீபா ஆகும். இது பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகள் போன்ற சூடான நன்னீர் இருக்கும். இவை பொதுவாக மூக்கின் வழியாக நமது உடலில் நுழைந்து மூளையைத் தாக்கும். இதன் காரணமாகவே இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான நோயாகும், இருப்பினும், இது எப்போதும் மிக மிக ஆபத்தானது.
இந்த நெக்லேரியா ஃபோலேரி நமது மூக்கின் வழியாக நுழைந்தால் மட்டுமே இந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் இந்த நீரைக் குடித்தால் நமக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு ஏற்பட்டால் 12 நாட்களில் இதற்கான அறிகுறிகள் ஆரம்பிக்கும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, வலிப்பு, கோமா ஆகியவை அதன் அறிகுறிகள். நோய் பாதிப்பு ஏற்பட்டு 18, 19 நாட்களில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
அமெரிக்காவில் 1962 முதல் 2023 வரையில், பாதிக்கப்பட்ட 150 பேர்களில் வெறும் 5 பேர் மட்டுமே மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு ஏற்பட்ட 3 நாட்களில் மரணம் உறுதி என்றே இதுவரையான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.