ஹார்வர்டு பல்கலைக்கழக வாரிய பதவியில் இருந்து திடீரென விலகிய இஸ்ரேல் கோடீஸ்வர தம்பதி!
ஹார்வர்டு கென்னடி பள்ளியின் வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து இஸ்ரேலின் கோடீஸ்வரர் இடான் ஆஃபர் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். அத்துடன் காசா முனையை ஒட்டியுள்ள இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலியர்களைக் கொன்று போரை தூண்டிய ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசுதான் முழுமையான பொறுப்பு என்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டன. ஹார்வர்டு இளங்கலை பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் 33 ஹார்வர்டு மாணவர் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளி சிறையில் வாழ நிர்ப்பந்தித்துள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த அறிக்கை வைரலாக பரவிய நிலையில், மாணவர் அமைப்புகளுக்கு பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் எதிர்ப்பு வலுத்தது. ஹமாசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஹார்வர்டு கென்னடி பள்ளியின் வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் கோடீஸ்வரர் இடான் ஆஃபர் மற்றும் அவரது மனைவி பாட்டியா ஆகியோர் விலகி உள்ளனர். இஸ்ரேலை குற்றம்சாட்டி மாணவர் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அந்த அறிக்கைக்கு பல்கலைக்கழக தலைவர் கிளாடின் கே கண்டனம் தெரிவிக்காததாலும் பதவி விலகியதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மாணவர் அமைப்புகளின் அறிக்கை தொடர்பாக தாமதமாக பதிலளித்த பல்கலைக்கழக தலைவர் கிளாடின் கேவுக்கு ஹார்வர்டு முன்னாள் மாணவர்கள் கண்டனம் தெரிவித்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.