இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி!

 
Ismail Haniyeh sons

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 33,482 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 76,049 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

Hamas

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. காசா போரில் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கான உணவு விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருவதால், காசாவில் ரமலான் பண்டிகை கொண்டாட்டங்கள் முடங்கியுள்ளன. 

இந்த நிலையில், காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியேவின் மகன்கள் ஹாசேம், ஆமீர் மற்றும் முகமது ஆகிய 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Ismail Haniyeh

இந்த தகவலை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே உறுதி செய்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து தாக்கினாலும் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்றும், இந்த படுகொலைகளால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். 

From around the web