காசா மீது தாக்குதலை அதிகரித்த இஸ்ரேல்.. இணையத்தில் ட்ரெண்டாகும் ‘All Eyes On Rafah’
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ‘All Eyes On RAFAH’ என்பது டிரெண்டாகி வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இந்த போரில் காசாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காசாவின் ராஃபா நகர் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் காரணமாக இடம் பெயர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ராஃபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளதால் அங்கு தாக்குதல்களை நடத்த வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தல் அல் - சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பல பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. ஆயிரம் பேர் இருந்த இந்த முகாமில் 2 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், “இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழி தாக்குதலால் தற்போது குறைந்தது 14 லட்சம் பேர் ராஃபாவில் தங்குமிடம் இல்லாமல் எங்கே தங்குவது என்று தேடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முதல் சமூக ஊடகங்களில் ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.