சீக்கிய தலைவரின் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பா? தூதரை வெளியேற்றிய கனடா.. இந்தியா - கனடா உறவில் மீண்டும் விரிசல்

 
khalistani

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி கனடாவில் இருந்து இந்திய தூதரக உயர் அதிகாரி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா மற்றும் இங்கிலாந்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தூதரகத்தை தாக்குவது இந்து கோயிலை சேதப்படுத்துவது என்று இந்தியாவுக்கு நெருக்கடி தரும் வகையில் கனடாவில் அவ்வப்போது வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கனடாவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

Justin Trudeau

இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி, தங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜரின் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கனடாவில் இருந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை வெளியேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனிடையே ஹர்தீப் சிங் நிஜரின் கொலையில் கனடாவின் புகாரை நிராகரித்துள்ள இந்தியா இது அடிப்படை ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு என கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியாவுக்கு எதிராக தொடரும் தேச துரோக செயல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

From around the web