கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா..? பிறப்பு குறித்து ட்ரம்ப் எழுப்பிய சர்ச்சைக் கேள்வி

 
Trump - kamala

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரில் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரில் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார். சிகாகோவில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்கத்தின் மாநாட்டில் டிரம்ப் பங்கேற்றார். 

Kamala Harris

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் தற்போது  கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன்.

ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை. ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார். இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான் என்றார்.

Kamala Harris - Trump

கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, ஒருவரை அவர்கள் யார், அவர்கள் எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பதைச் சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. டிரம்ப் கருத்து வெறுக்கத்தக்கது மற்றும் அவமதிப்பு ஆகும் என்றார்.

கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web