கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறாரா?
கனடாவில் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் ஆளும் லிபரல் கட்சியிலும் தலைவர் மற்றும் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ருடோ மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 2 பாராளுமன்ற இடைத் தேர்தல்களில் ஆளும் லிபரல் கட்சி தோல்வியடைந்ததையொட்டி கட்சியினர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
சமீபத்தில் துணை பிரதமரும், நிதித்துறை அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக டாம்னிக் லே ப்ளாங் ஐ ட்ரூடோ நியமித்தார். த்ற்போது பிரதமர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ஜஸ்டின் ட்ருடோ முடிவு செய்துள்ளதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. டாம்னிக் லே ப்ளாங் ஐ இடைக்காலத் தலைவர் மற்றும் இடைக்கால பிரதமராக இருக்குமாறு ட்ரூடோ கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாகவே பிரதமர் பதவியிலிருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். ட்ரூடோ பதவி விலகினால், தேர்தல் வரையிலும் பிரதமராக தொடர்வாரா? இடைககால பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது முன்னதாகவே பாராளுமன்றத் தேர்தல் வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கனடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு தாராளமாக அகதிகள் மற்றும் அதிகாரப்பூர்வமான குடியேற்றத்தை அனுமதித்ததால் வீடுகளில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிபரல் கட்சிக்கு கடுமையான சோதனைஏற்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட போது, 2013ம் ஆண்டு கட்சியின் தலைவராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பிரதமராகவும் உள்ளார் ட்ரூடோ. தற்போது அவர் மீதே கடும் அதிருப்தி ஏற்பட்டு லிபரல் கட்சி மீண்டும் இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில், கனடா அரசியலில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மை வட அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.