ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு.. அனைவரின் உடல்களும் மீட்பு! 

 
Iran

ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஈரான் அதிபர் உள்பட அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் அதிபராக பதவி வகித்து வந்த இப்ராகிம் ரைசி (63), நேற்று அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். 

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Iran

மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் தேடுதல் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மாயமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். 15 மணி நேரத்திற்குமேல் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிபர் இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Iran

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

From around the web