இங்கிலாந்து பிரதமரின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி
ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிளேர் கோடின்ஹோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிய உள்ளதால் அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கு அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக ராணுவ அமைச்சராக பணியாற்றிய பென் வாலஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உக்ரைன் போரில் இங்கிலாந்து ராணுவத்தின் முடிவுகளை மேற்பார்வை செய்வதில் இவர் திறம்பட பணியாற்றினார். இதனையடுத்து புதிய ராணுவ அமைச்சராக கிராண்ட் ஷாப்சை நியமித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இவர் பிரதமர் ரிஷி சுனக்கின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவர் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கிளேர் கோடின்ஹோ (38), இங்கிலாந்தின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இங்கிலாந்தில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கிளேர் கோடின்ஹோவின் பதவி மிகவும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.
I am delighted to have been appointed Secretary of State for Energy Security and Net Zero.
— Claire Coutinho MP (@ClaireCoutinho) August 31, 2023
I will work with the Prime Minister to safeguard our energy security, reduce bills for families, and build cleaner, cheaper, homegrown energy. https://t.co/qs9mg10ZHE
இதுகுறித்து கிளேர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான மாநில செயலாளராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், குடும்பங்களுக்கான கட்டணங்களை குறைக்கவும், தூய்மையான, மலிவான, உள்நாட்டு எரிசக்தியை உருவாக்கவும் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.