மனைவி, மகளை சுட்டுக்கொன்ற இந்திய வம்சாவளி பணக்காரர்.. துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை..!

 
USA

அமெரிக்காவில் மனைவி, மகளை சுட்டுக்கொன்று இந்திய வம்சாவளி பணக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டீனா கமல் (54). இந்த தம்பதிக்கு அரினா கமல் (18) என்ற மகள் இருந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல் அமெரிக்காவில் பெரும் பணக்காரராக உள்ளார். ராகேஷ் கமல், குடும்பத்துடன் டொவர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 28-ம் தேதி பண்ணை வீட்டில் ராகேஷ் கமல், அவரது மனைவி டீனா கமல், மகள் அரினா கமல் ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா? தற்கொலை செய்துகொண்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Gun suicide

இந்த நிலையில், மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ராகேஷ் கமல் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ராகேஷ் அருகே கைத்துப்பாக்கி கிடந்துள்ளது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தடயவியல் சோதனை மேற்கொண்டனர். மேலும், 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் ராகேஷ் கமல், மனைவி டீனா கமல், மகள் அரினாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ராகேஷ் கமலுக்கு சொந்தமானது அல்ல என்பதும், துப்பாக்கி வைத்துக்கொள்ள ராகேஷுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

USA

மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இந்தியவம்சாவளி பணக்காரர் ராகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web