இந்திய இளைஞர் சுட்டுக் கொலை.. கனடாவில் தொடரும் மர்மம்
கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019-ம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.
இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
நேற்று முன்தினம் (ஜூன் 8) 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.