அதிக குளிரால் உறைந்து போய் உயிரிழந்த இந்திய மாணவர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் அதிக குளிரால் உறைந்து போய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்ததை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் தம்பதி ஐஷ் மற்றும் ரித்து திவான். இந்த தம்பதிக்கு அகுல் தவான் என்ற மகன் இருந்தான். இவர், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர். இந்தியாவை சேர்ந்தவரான தவான், குளிர்கால விடுமுறை முடிந்து கல்லூரிக்கு மீண்டும் சென்ற ஓரிரு நாட்களில் அந்த கொடூரம் நடந்துள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் மாலை வேளையொன்றில் வெளியே சென்றுள்ளார். பின்பு மதுபானம் குடித்து விட்டு அவர்களுடன் திரும்பியுள்ளார். இரவு 11.30 மணி இருக்கும்போது, கல்வி மையத்தின் வளாக பகுதியருகே இருந்த இரவு விடுதி (கிளப்) ஒன்றிற்கு சென்றனர். ஆனால், அந்த கிளப்பில் இருந்த பணியாளர் தவானை உள்ளே விடவில்லை. பலமுறை கேட்டும் அவரை உள்ளே விடவில்லை.
அந்த பணியாளர் அவரை வெளியே விரட்டியுள்ளார். இதனால், அவரை அழைத்து செல்ல வாடகை காருக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதுபோல் இரண்டு முறை வந்த வாகனங்களை அவர் ஏற்க மறுத்து விட்டார். இந்த சூழலில், தவானின் நண்பர்கள் இரவில் தவானை தொலைபேசி வழியே அழைத்தனர். ஆனால், அதற்கு பலனில்லை. இதனால், நண்பர்களில் ஒருவர் வருத்தத்தில் கேம்பஸ் போலீசாரிடம் சென்று தகவல் தெரிவித்து, உதவி கேட்டுள்ளார்.
அவர்களும் தவானை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடி அலைந்தனர். கல்வி மைய வளாகத்திற்கு செல்லும் வழி முழுவதும் தேடி பார்த்தும் அகுல் தவானை காணவில்லை. அடுத்த நாள் காலையில், கட்டிடம் ஒன்றின் பின்னால் இருந்த பகுதியில் தவான் கண்டெடுக்கப்பட்டார். அவர் அந்த பகுதியிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார்.
கடந்த ஜனவரி 20-ந்தேதி மரணம் அடைந்த நிலையில், அதற்கான காரணம் ஒரு மாதம் கழித்து வெளிவந்து உள்ளது. ஹைப்போதெர்மியா என்ற பாதிப்பால் அவர் உயிரிழந்து உள்ளார். சம்பவம் நடந்த அன்று வெப்பநிலை குறைந்து, மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மதுபானம் குடித்ததில் ஏற்பட்ட விளைவு மற்றும் அதிக குளிரான சூழலில் அதிக நேரம் இருந்தது ஆகியவை அவரது மரணத்திற்கான காரணங்களாக அமைந்து விட்டன என கூறினர்.
எனினும், அகுலின் குடும்பத்தினர் கூறும்போது, காணாமல் போன உடன் தகவல் தெரிவித்த உடனேயே கண்டுபிடிக்காமல் 10 மணிநேரத்திற்கு பின்னரே அகுலை கண்டுபிடித்து உள்ளனர். காணாமல் போன இடத்திற்கும், கிடைத்த இடத்திற்கும் இடையே 200 அடி தொலைவே உள்ளது என்று குற்றச்சாட்டாக கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.