பல்கலைக்கழக வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்.. நடப்பு ஆண்டில் 4வது சம்பவம்

 
Ohio

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் சின்சினதி நகரில் பர்டூ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஷ்ரேயாஸ் ரெட்டி பினிகர் என்பவர் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், மாணவர் ஷ்ரேயாஸ் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷ்ரேயாஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ஓஹியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவரான ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தவறுகள் நடந்ததாக சந்தேகிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Murder

இதனிடையே, அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இதுவரை இந்திய மாணவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில் இண்டியானா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அதேபோல், ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவர் விவேக் சைனி (25) கடந்த மாதம் 16-ம் தேதி சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். போதைபழக்கத்திற்கு அடிமையான ஆதரவற்ற நபரான ஜூலியன் என்பவர் விவேக்கை அடித்துக்கொலை செய்தார்.

Ohio

அதேபோல், இலினொய் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவர் அகுல் தவான் (18) கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web