ஜெட் ஸ்கை விபத்தில் சிக்கி இந்திய மாணவர் பலி.. அமெரிக்காவில் சோகம்!
அமெரிக்காவில் ஜெட் ஸ்கை விபத்தில் இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தின் தலைநகரான இண்டியானபொலிஸ் பகுதியில் இந்தியானா பல்கலைக்கழகம்-பர்டியூ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ரமண பித்தலா (27) என்பவர் படித்து வந்துள்ளார். வருகிற மே மாதத்தில் அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார்.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் தண்ணீர் ஸ்கூட்டர் எனப்படும் ஜெட் ஸ்கை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு பித்தலா சென்றுள்ளார். இயந்திரம் உதவியுடன் இயங்க கூடிய இந்த ஸ்கூட்டரின் மேல்புறம், கைகளால் அதனை பிடித்தபடி இயக்க முடியும். கீழ்புறம் படகு வடிவில் இருக்கும். இதனால், அந்த வாகனத்தின் உதவியுடன் கடலின் மேற்பரப்பில் அலைகளின் ஊடே பயணம் செய்ய முடியும்.
இந்த சூழலில், இதே வகை நீர் ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்த தெற்கு புளோரிடா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனும் அந்த பகுதியில் பயணித்து உள்ளான். இந்நிலையில், இந்த இரண்டு பேரின் வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில், இந்தியாவை சேர்ந்த பித்தலா உயிரிழந்து விட்டார். சிறுவன் காயமின்றி தப்பி விட்டான் என புளோரிடா மீன் மற்றும் வனவாழ் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த சம்பவத்தில் கைது நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வேறு யாரும் விபத்தில் காயமடைந்தனரா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. பித்தலாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நிதி திரட்டும் பணியும் நடந்து வருகிறது.