கார் மோதி இந்திய மாணவி பரிதாப பலி.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வருபவர் கோடீசுவர ராவ். இவரது மனைவி பாலாமணி. இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (25). இவருடைய தந்தை முன்னாள் சிஆர்பிஎப் படை வீரர் ஆவார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு படிப்பை தொடர சென்ற சவுமியா, புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை படித்து வந்திருக்கிறார். படிப்பை முடிந்ததும், வேலை தேடி வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு, இருப்பிடத்திற்கு திரும்பும்போது, சாலையை கடந்த அவரின் மீது விரைவாக வந்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். விபத்து பற்றி அறிந்ததும், அவருடைய பெற்றோர் மனமுடைந்து போனார்கள்.
கடந்த 11-ம் தேதி சவுமியா பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக சவுமியாவின் தந்தை கோடீசுவர ராவ் ஆடைகளை கொடுத்து இருக்கிறார். அவருடைய படிப்புக்கு செலவு செய்வதற்காக நிறைய போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார். சவுமியாவின் உடலை தெலுங்கானாவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யும்படி அவருடைய குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.