மனைவி, மகனை சுட்டுக் கொன்றுவிட்டு இந்திய வாலிபர் தற்கொலை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Baltimore

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோரில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பகுதியில் உள்ள வீட்டில் இந்தியர்கள் 3 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டறிந்தனர். உயிரிழந்த மூவரும் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த யோகேஷ் எச்.நாகராஜப்பா (37), அவரது மனைவி பிரதிபா ஒய்.அமா்நாத் (37), மகன் யஷ் ஹொன்னல் (6) ஆகியோா் என்பது உறுதி செய்யப்பட்டது.

Gun

இது குறித்து மாகாண காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் ஆன்டனி ஷெல்டன் கூறியதாவது, உயிரிழந்தவா்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளன. யோகஷ், முதலில் தனது மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்ட பிறகு, தற்கொலை செய்துகொண்டாா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அருகில் மக்களின் உயிருக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றார்.

கா்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹல்லேகல்லு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ், கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இச்சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள யோகேஷின் சகோதரருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Baltimore

சம்பவம் நடைபெற்று மூன்று நாள்களாகிவிட்ட நிலையில், உயிரிழந்த மூவரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோகேஷின் தாயார் ஷோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web