அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து.. 6 பேர் பலி!
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து நேற்று 6 பயணிகளுடன் சிறிய ரக விமானம் கலிபோர்னியாவுக்கு புறப்பட்டது. விமானம் கலிபோர்னியாவின் மிரிடோ நகரில் உள்ள விமான நிலையம் அருகே விமானம் வந்தது. அப்போது, நடு வானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மிரிடோ விமான நிலையம் அருகே உள்ள விளைநிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தரையில் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விமானத்தில் எரிந்த தீயை அணித்து அதில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஃபெடரல் விமான நிர்வாகம் கூறியதாவது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில், லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சான் டியாகோவிற்கு வடக்கே 65 மைல் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் வயல்வெளியில் விழுந்ததையடுத்து ஒரு ஏக்கர் தாவரங்களும் தீயில் கருகியது. விபத்தில் பலியானாவர்களின் விவரம் குறித்து எந்த தகவலும் உடனடியாக தெரிவரவில்லை. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.