நான் கமலா ஹாரிசை விட அழகாக இருக்கிறேன்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டொனால்டு டிரம்ப்!

 
Trump - Kamala Harris

கமலா ஹாரிசை விட தான் அழகாக இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டார். 

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஜோ பைடன், அதற்கான அறிவிப்பையும் கடந்த மாதம் 21-ம் தேதி வெளியிட்டார். தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவுத்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். 

Kamala Harris

அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது தனக்கு மிகவும் எளிது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது, “ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப் போல் நடந்து கொள்கிறார். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அது ஒரு முட்டாளின் சிரிப்பைப் போல் இருக்கும். கமலா ஹாரிசை விட நான் அழகாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

From around the web