இவர் அதிபரானால்.. 3-ம் உலகப்போர் நிச்சயம்.. மீண்டும் சர்ச்சையில் முன்னாள் அதிபர்!
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்துவிடும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் சொந்த கட்சியினரிடம் இருந்தே ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கிய பிறகு ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரித்ததாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதிலும் குறிப்பாக பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலாவுக்கே சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
இந்த நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “சீன ஆதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவுக்கு திறமை கிடையாது. அவர் அமெரிக்காவின் அதிபரானால் நிச்சயம் 3-ம் உலகப்போர் வந்துவிடும். பல லட்சம் பேரின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகிவிடும். அமெரிக்காவின் மகன்களும், மகள்களும் ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் போரில் சண்டையிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 3-ம் உலகப்போர் நிகழாமல் நிச்சயம் தடுப்பேன்.” என்று தெரிவித்தார்.